தமிழகம் முழுவதும் பள்ளிகள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 அரசு மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களின் கல்விச் சூழல் பாதிக்கப்படுவது, வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவது, பேருந்து நிலையங்கள் அருகே பெண்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைவது போன்ற காரணங்களால், பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், பள்ளி, கல்லூரி, கோவில் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்குள் செயல்பட்டு வந்த மதுக்கடைகளை மூடவும், புதிய உரிமங்கள் வழங்காமல் இருக்கவும் தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் 717 அரசு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை வரவேற்று உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே, பள்ளி மாணவர்கள் தினமும் சென்று வரும் பாதையில் இயங்கி வந்த அரசு மதுக்கடை மூடப்பட்டதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். அங்கு பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து த.வெ.க. நிர்வாகிகள் கூறுகையில், “பள்ளி மற்றும் கோவில் அருகே மதுக்கடைகள் இயங்குவது சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தது. மாணவர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு, பொதுமக்களின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசால் எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்கது. இது சமூக நலனுக்கான நல்ல தொடக்கம்,” என்றனர்.
அரசின் இந்த நடவடிக்கைக்கு உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மீதமுள்ள பொதுமக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளிலும் மதுக்கடைகள் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.


No comments:
Post a Comment